*லைப்ஸ்டைல்*( life style)
*லைப்ஸ்டைல்*
மாற்றங்கள் தான் வளர்ச்சி என்ற எண்ணப் போக்கு வலுபெற்று நேர்மைறை மாற்றங்களை நல்ல மாற்றங்கள் என்றும் எதிர்மறையான மாற்றங்களை விரும்பத்தகாத மாற்றங்களாகவும் பார்க்கும் சமூக மதிப்பீடுகள் நாகரீகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. இவ்வளர்ச்சி சமூகத்தின் பலதரப்பினரிடையேயும் அவரவர் வாழ்க்கை முறைகளுக்கு ஏற்ப வேகங்கொள்கிறது அல்லது மாற்றங்காண்கிறது.
இன்றைய காலகட்டத்தில் மக்கள் தங்களது சமூக ,பொருளாதார நிலைப்பாட்டை, தம் உண்மை நிலைக்கும் மேலாக காண்பித்துக் கொள்ளவே விரும்பி அதற்கேற்ற செயல்பாடுகளிலும் இறங்குகின்றனர்.இதனால் ஏற்படும் தனிமனித சிக்கல்கள் பின்னர் சமூகச் சிக்கல்களாகவும் உருமாறி விடுகிறது.
குறிப்பாக சமூக அங்கீகாரத்திற்காக மனிதர்கள் போடும் வேடம் தான் அது. நடை ,உடை, பாவனைகள் ,என்று தங்களது வெளிச் செயல்பாடுகளில் போலியான மாற்றங்களை ஏற்படுத்திக் காட்டி வாழ்க்கை முறையை அவ்வப்போது மாற்றிக்கொள்ளும் முறையே புதிய லைப்ஸ்டைல் என்று எண்ணும் நடைமுறை எதார்த்தமானதாகி வருகிறது.
இத்தகைய தற்காலிக மாற்றங்கள் மனிதர்களில் எல்லா சூழ்நிலைகளிலும் நிலையானதாக இருக்க இயலுமா ? என்பதே கேள்வி.
ஒருவருடைய வாழ்க்கை முறை என்பது அவரது வெளித்தோற்றத்தோடு மட்டும் தொடர்புடையதல்ல.அது அவரது மனம் சார்ந்த ஒரு நிலைப்பாடு.அதில் இயல்பான மன இயல்புகள், மனப்பான்மைகள், எண்ணங்கள், வழிவழியாக வந்த மரபணுக்கள், சுற்றுச் சூழல், வளர்க்கப்பட்ட விதம், அவரைச் சுற்றிய சமூகம்.....போன்றன பெரும் பங்கு வகிக்கின்றன.
எனவே தற்காலிகமான வெளித்தோற்ற மாற்றம் பாதகமான சூழல்களில் வெளிச்சம் போட்டு ஒருவரின் உண்மை நிலையை காட்டிக் கொடுத்து விடும்.
வாழ்கைமுறை பிறரால் முகம் மலர்வோடு கவனிக்கப்பட்டு பின்பற்றப்பட தக்க விதத்தில் மாற்றப்பட, மனதிலிருந்து மாற்றங்கள் நிகழ வேண்டும். அதற்கான மனப்பயிற்சிகள் அன்றாட வாழ்வில் ஏற்படுத்தி நடைமுறை படுத்தப் பட்டால் மட்டுமே லைப்ஸ்டைல் என்ற
நாகரீக வளர்ச்சி ஒருவரது வாழ்வில் நிலையானதாக முடியும்.
பிரபலங்களையோ, திரைப்பட நாயகர்களையோ வாழ்கை மாதிரிகளாக காண்பித்துக் கொள்ளும் மனப்பாங்கு முதிர்ச்சியற்ற நிலைப்பாடாகவே கருதமுடிகிறது. இத்தகைய மாதிரிகள் உண்மையிலேயே சிறந்த வாழ்கை முறையை உடையவர்களாக இருந்தாலும் அவர்களை மாதிரிகளாகக் கொண்டு தங்கள் லைப்ஸ்டைலை மாற்றிக் கொள்ளுவோர் அவர்களது உள்ளார்ந்த பண்புகளை கவனத்தில் கொள்வதில்லை.வெளித்தோற்ற மாற்றங்களை மட்டுமே தங்களுடையதாக்கிக் கொள்ளும் பட்சத்தில் பின்பற்றுவோரின் நடத்தை மாற்றங்கள் போலியாக தெரிய வருகிறது.
எனவே அழகிய லைப்ஸ்டைல் என்பது வெளித்தோற்ற மாற்றங்கள் மட்டுமல்ல மனதின் பண்பு நலன்களை சார்ந்ததே என்ற தெளிவில் நற்குணங்களையும்
அவற்றிற்கேற்ற செயல்பாடுகளையும் மாற்றும் முயற்சியே ஆகும். இத்தகைய மன அழகை சீர்படுத்தும் முனைப்பு வாழ்வில் தொடர் செயலாக இருந்து கொண்டே
இருக்க வேண்டும் மனிதனின் வாழ்கைப் பயணத்தின் இறுதி புள்ளிவரை.
_ Dr.ஜான்சிபால்ராஜ்.
( சூரியா இதழில் வெளிவந்த எனது கட்டுரையின் )
Comments
Post a Comment