*தேர்தல் அவசரம்*
மக்களாட்சி முறையில் மக்களின் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க தேர்தல் என்பது மிக முக்கிய அம்சம்.உலகில் மிகப் பெரிய ஜனநாயக நாடான நமது நாட்டில் பதினெட்டு வயது முழுமையடைந்த ஒவ்வொருவரும் நேர்மையாகவும் சுதந்திரமாகவும் வாக்களிக்கும் உரிமைப் பெற்றிருக்கின்றனர்.
அரசியலில் தங்களுக்கான அதிகாரத்தை வெளிப்படுத்தும்
ஒரு கருவியே மக்களின் வாக்குரிமை.
இவ்வுரிமை அரசியலாளர்களால் கட்டுப்படுத்தப்படவோ முடக்கப்படவோ கூடாது. தேர்தல்களில் வெற்றிபெறும் நோக்கோடு மக்களின் அறியாமை , வறுமை போன்றவற்றை சாதகமாகப் பயன்படுத்தி அவர்களது வாக்குகளைச் சூரையாடுவது குற்றம். அவற்றைச் செய்வோரை நடுநிலையில் நின்று தடுக்கவும் தண்டிக்கவும் உரிமைப் பெற்றது மக்களாட்சி முறையை சிறப்பாக வடிவமைப்பதில் பெரும் பங்குவகிக்கும் தேர்தல் ஆணையம் .
ஒலி ,ஒளி ஊடகங்களால் இன்று மனிதச் சமூகம் மிகக் குறைந்த எல்லைகளுடைய வட்டத்திற்குள் வந்து விட்டதால்,உலகின் ஒருமூலையில் ஏற்படும் சிறு அதிர்வலைகள் கூட மனிதக்கடலின் மொத்த பரப்பையும் விரைந்தடைந்து விடுகிறது. எனவே தேர்தல் காலகட்டத்தில் அரசியல் கட்சியினரும் வேட்பாளர்களும் குடிமக்களின் உண்மையான நலனைக் கருத்தில் கொண்டு நம் நாட்டின்மீதான பிற நாடுகளின் நன்மதிப்பிற்குக் குறைச்சல் ஏற்படாதவாறு தங்களது தேர்தல் அறிக்கைகள் மற்றும் பிரச்சாரங்களை மேற்கொள்ளுதலே ஓர் அறிவார்ந்த சமூகத்தின் சிறந்த பிரதிபலிப்பாகும் என்பதைக் வாக்காளர்களும் வேட்பாளர்களும் கருத்தில் கொள்ள வேண்டும்
வாக்காளர்கள் ஒவ்வொருவரும் தம் வாக்கின் வலிமையை உணர்ந்து நம்மை ஆளுபவர்களைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை மிகச் சரியாக செய்தாக வேண்டும் .எக்காரணம் கொண்டும் விலைமதிப்பற்ற நமது ஓட்டை விற்பனைக்குரியதாக்க கூடாது. அது நமது உரிமையை நாமே அவமதிப்பதாகும்.
எப்படியும் வென்றாக வேண்டும் என்ற நோக்கில் தேர்தல் அறிக்கைகளும் வாக்குறுதிகளும் வேட்பாளர்களால் சக்திவாய்ந்த வாக்குகளை வைத்திருக்கும் மக்களிடையே அள்ளி வீசப்படுகின்றதைப் பார்க்க முடிகிறது. ஆனால் ஓட்டின் அபார சக்தியை அறியாத அடித்தள மக்கள் தான் தேர்தல் களத்தில் தோற்றுப் போகும் பரிதாப நிலையில் இருக்கின்றனர்; அறியாமையாலும் வறுமையினாலும் தம் உரிமையை சரிவர பயன்படுத்த இயலாமல் தங்கள் எதிர்காலத்தைத் தொலைத்து நிற்கின்றனர்.
பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தேர்தல் ஆணையம் செயல்படுத்தி வந்தாலும் அதனோடு இணைந்து பொதுமக்களும் தம் கடமைகளை நேர்மையான முறையில் செய்தால் மட்டுமே நம் எதிர்காலத்தை நாம் நமது கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.அல்லது குடியாட்சி என்ற பெயரில் முடியாட்சி முறையில் தான் வாழ்ந்தாக வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்படுவோம்.
எனவே மக்களாகிய நாம் தான் தெளிந்த சிந்தையோடு நடுநிலையில் ஆய்ந்தறிந்து சரியான தலைவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். எனது ஒரு ஓட்டால் என்ன நஷ்டம் வந்துவிட போகிறது என்ற அலட்சிய மனப்பான்மையோடு ஓட்டுரிமையை விட்டுக் கொடாமல் ,பெருமிதத்தோடு வாக்களிப்போம். ஓட்டிற்கு விலைப்பேச வருவோரை ஏளனமாகப் பார்த்து எள்ளி நகையாடுவோம்.நமது சமூகத்தை நாகரீகத்தின் உச்சமாக நாமே கட்டமைப்போம்.வாழ்க சனநாயக ம்.
_
Dr.த.ஜான்சிபால்ராஜ்.
எழுத்தால் மக்களின் மனதை தட்டி எழுப்புகிறீர்கள் ....
ReplyDeleteமிகவும் அருமையாக உள்ளது...
நன்றி ,வாழ்த்துகள்
ReplyDeleteசிறப்பான விழிப்புணர்வு 👌
ReplyDeleteமகிழ்ச்சி ஐயா, தங்களது கருத்திற்கு!
ReplyDeleteNice awarness aunty
ReplyDeleteHi....happy da.
ReplyDelete