சுகாதார தினம்_ ஏப்ரல் 7.
உலக நலவாழ்வு நாள் (World Health Day) என்பது உலக சுகாதார அமைப்பின் ( WHO) மூலம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் ஏழாம் தேதி உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. 1948ஆம் ஆண்டில் நடைபெற்ற உலக நலவாழ்வு மன்றத்தின் கூட்டம் ஒன்றில் ஒவ்வொரு ஆண்டும் 1950 இல் இருந்து உலக நலவாழ்வு நாளாகக் கொண்டாடுவதாகத் தீர்மானிக்கப்பட்டது. அன்றிலிருந்து உலக நலவாழ்வு நிறுவனத்தால் முக்கியமான நலவாழ்வு தொடர்பான கருப்பொருளை மையமாகக் கொண்டு கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி இவ்வாண்டு 2021 ,ஏப்ரல் 7ம் நாள் சுகாதார தினம் , *சிறந்த மற்றும் ஆரோக்கியமான உலகத்தை உருவாக்குதல்* என்னும் ஆழமான கருத்தை மையமாக வைத்து கொண்டாட உலகச் சுகாதார அமைப்பால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா நோய்த்தொற்றால் முழு உலகமும் அல்லலுற்று முடங்கி கிடக்கும் இச்சூழலுக்கு மிகவும் அவசியமான இக்கருத்து மக்களின் கவனத்தில் சுகாதாரத்தின் அவசியத்தை உணர்த்தி நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்த வல்லது.
உலகில்
மனிதனின் ஆற்றல் அல்லது சக்தியே இன்றளவும் மனிதகுலத்தைத் தன்னிகரற்ற தனித்தன்மை உடையதாக்கி வைத்திருக்கிறது.
மனிதன் உட்பட உலகின் அனைத்து உயிரினங்களையும் பாதிக்கும் சுகாதார கேடுகள் நாளுக்கு நாள் பெருகி வரும் நிலையில் மனித ஆற்றலை அதிகரிக்கவும் வளமைப்படுத்தவும் மனிதர்கள் திட்டமிட்டு செயல்பட்டாக வேண்டும். இது தனிமனிதன் ஒவ்வொருவரின் கடமையுமாகும்.
மனித வளம் என்பது மனிதனின் உடல் மற்றும் மனதின் ஆரோக்கியத்தைப் பொருத்தே அமைகிறது. ஆரோக்கியமான உடல்நிலையும் மனநிலையுமே மனிதச் சக்தி.
உடல்நிலை பராமரிப்பில் வளரும் மற்றும் பின்தங்கிய நாடுகள் குறைவான அக்கறை காட்டுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருக்கிறது.
கைகளை ஒழுங்காக கழுவும் பழக்கம் இல்லாததால் மட்டுமே உலகில் ஆண்டுதோறும் 29 இலட்சம் மக்கள் இறப்பதாக உலகச் அச்சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது.வளரும் நாடான நமது இந்தியாவில் ஆண்டு தோறும் 5 லட்சம் குழந்தைகள் இந்த அறியாமையினால் பாதிக்கப்படுகின்றனர்.
கைகளின் இடுக்குகளில் ஒட்டியிருக்கும் ஸ்டெபைலோக்காஸ் ஆரியஸ் என்ற கிருமி உணவின் மூலம் குடலுக்குள் சென்று குடற்புழு, இரத்தபேதி,வாந்தி ...போன்ற பல்வேறு உடல்நல குறைவை மனிதர்களுக்கு ஏற்படுகிறது. குழந்தைகளே இத்தகைய நோயினால் அதிகம் பாதிக்கப் படுகின்றனர்.வளரும் பருவத்தில் அடிக்கடி நோய்வாய்படுவதால் மனவளமும் மூளைவளர்ச்சசியும் இயல்பாகவே குன்றும் நிலை ஏற்படுகிறது. எனவே தனிமனித சுகாதார முறைகளைக் குழந்தைப் பருவத்திலிருந்தே பெற்றோர்கள் கற்பித்து அவற்றை அவர்களது இயல்பான பழக்கங்களாகவே ஆக்கிவிட்டால் சமூகத்தில்
ஆரோக்கியமான எதிர்காலம் கட்டமைக்கப்பட்டு விடும் என்பதில் சந்தேகமேயில்லை.
சீனாவில் ஏற்பட்ட கொரோனா என்ற கொள்ளை நோய் முழு மனித இனத்தையும் ஆக்கிரமித்து உலகளாவிய சமூக மற்றும் பொருளாதார சீர்குலைவை ஏற்படுத்தியுள்ளது. இந்நோயை கட்டுப்படுத்தும் மிக முக்கியக் காரணிகளுள் ஒன்று தனிநபர் சுகாதாரத்தை அறிவுறுத்துதலே ! ஒவ்வொருவரும் அரசு எடுக்கும் சுகாதார நடவடிக்கைகளை கடைபிடிப்பதோடு அவற்றைப் பற்றின விழிப்புணர்வை அறியாதோருக்கு ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்திற்குள்ளும் இருந்து கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து பொறுப்புடன் செயல்பட வேண்டும்.
நோய்த் தொற்றுகளை எதிர்த்துப் போராடும் அளவு உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுப் பழக்க வழக்கங்களைக் கடைபிடிக்க வேண்டும்.இத்தொற்று முதன்முதலாக மனிதர்களுக்கு ஏற்பட்டிருக்கும் நோய்.இதை எதிர்த்துப் போராடும் தன்மை நம்மில் உருவாகுவது படிப்படியான வளர்ச்சியின் முன்னேற்ற நிலையாக தான் இருக்க முடியும். எனவே முடிந்தவரை அத்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதும் தடுப்பதுமே தனிநபர் சுகாதாரத்தின் மையமாக அமைய வேண்டும். அப்போது தான் முழு உலகமும் இன்றைய
மனிதச் சக்தி இழப்பை தடுத்து வளமான எதிர்காலத்தை சீரமைக்க முடியும்.
கொடிய கொரோனா தொற்றின் பிடியில் சிக்கிய மனித இனம் இன்று ஓரளவு சுகாதாரத்தின் முக்கியத்துவத்தைக் கூர்ந்து கவனிக்கத் துவங்கியுள்ளது.
நோயில்லா சமூகமே பலம் பொருந்திய உலகை உருவாக்கும் என்ற உண்மையை ஒவ்வொருவரும் உணர்தலே மகிழ்ச்சியான வாழ்வுக்கு அடித்தளமிட்டு ஆரோக்கியமான உலகை மறு சீரமைக்கும். இன்றைய உலக சுகாதார நாளில் அதற்கான உறுதியை ஒவ்வொரு தனிநபரும் எடுப்போம் .
_ Dr. Jansipaulraj.
சுகாதார தினத்தில் ஒரு அருமையான பதிவு சகோ..👏👏👏👏
ReplyDeleteவாழ்த்துக்கள் 💐💐💐💐
நன்றி சகோ
ReplyDelete