சமூகச் சீரமைப்பில் சமயங்கள்
உலகில் வெகுசன வெகுசன முன்னணி சமயமான கிறித்தவம் மனிதகுலத்திற்கு நல்கிய ஆற்றல் மற்றும் பண்பாட்டுத் தாக்கங்கள் அளப்பரியது.
ஆரம்பத்தில் மனிதனின் நம்பிக்கைகளையும் மனோபாவங்களையும் திடப்படுத்த உதவிய நெறிமுறைகளற்ற சமய நம்பிக்கைகள் பின்னர் மனிதன் தனது சாதி, சமூக, பொருளாதார செல்வாக்கை வெளிப்படுத்தும் மதிப்பீட்டு நிறுவனங்களாகி நின்றன.
மதங்களின் கொள்கைகளும் பின்பற்றும் வழிமுறைகளும் அந்தந்த சமூகத்தளங்களின் ஆதிக்க நிலையிலிருந்தோரின் வடிவமைப்புகளுக்கேற்ப வளைந்து கொடுக்கத்தக்கதாகவே மாறிப் போயிருந்தன.
இந்நிலைப்பாடு அரசியல் மற்றும் பொருளாதார நிலைகளில் தாழ்த்தப்பட்ட வர்க்கத்தினரின் வாழ்க்கை முறைகளைக் கடினமாக்கியது.
காலப் போக்கில் சமயங்களில் ஏற்படுத்தப்பட்ட பக்தியின் வெளிப்பாட்டு முறைகளாக பல்வேறு சமயச் சடங்குகளினால் மக்கள் அல்லலுற்று புலம்பும் நிலையேற்பட்டது.
இந்நிலைப்பாடு உலகளாவிய நிலையாகவே மனிதச் சமூகத்தில் இருந்தும் வளர்ந்தும் வந்த நிலையில்..
கி.பி முதலாம் நூற்றாண்டில் எழுந்த ஆபிரகாமிய மத( ஓரிறைக் கொள்கை) அடிப்படையிலான கிறித்தவ மத கோட்பாடுகளும் நம்பிக்கைகளும் மனித மனங்களை இளைப்பாற செய்ததாக இருந்தது. அத்தோடு தனிமனிதனின் தன்மானத்தை அவமதிக்கும் அசமத்துவத்தை ,எதிர்க்கும் மையநோக்குடைய அதன் கொள்கைகள் அதன் பெரும் வளர்ச்சிக்கும் பரவலுக்கும் காரணமாக இருந்தது.
இறைவனுக்கு அடுத்து மனிதர்கள் அனைவரும் சமமானவர்களே என்பதை எடுத்துரைத்து, சமூகப் படிநிலைகளைச் சமநிலைப்படுத்த முயன்ற கிறித்தவத்தின் சாராம்சம் மனிதகுல வரலாற்றில், புதுப்புது மனப்பான்மைகளையும் முற்போக்கான சிந்தனைகளையும் ஏற்படுத்தியது.
கிறித்தவ மார்க்க வழிமுறைகள் தனித்தாள் ஒழுக்கத்தையும் சுதந்தரத்தையும் ஒருசேர வலியுறுத்தின.இதனால் கிறித்தவத்தைப் பின்பற்றுவது மனித நாகரீகத்தின் உச்சம் தொடும் பயணத்தில் ஒரு மைல்கல்லாகவே இன்றும் இருந்து வருகிறது.
இந்தியாவில் கிறித்தவம் கி.பி 14ம் நூற்றாண்டில் ஐரோப்பியக் கிறித்தவ மிஷனெரிகளால் முன்னெப்போதுமில்லாத வேகத்தில் பரவி ,இந்தியக் கலாச்சாரமேம்பாடும் துளிர்விடத் தொடங்கியது.
முதற்கண் பண்பாட்டு சீரமைப்பின் அதிசக்தி வாய்ந்த ஆயுதமான கல்வி ஒரு குறிப்பிட்டச் சாதியினருக்கு மட்டுமே கிடைத்து வந்த நிலை மாறி அனைத்து தரப்பினருக்குள்ளும் ஊடுருவியது.இதன்மூலம் ஏற்கெனவே இருந்துவந்த ஒருசார்பான சமூக மதிப்பீடுகள் ஆட்டங்கண்டன.
பெண்கல்வியின் அவசியம் வலியுறுத்தப்பட்டு சமத்துவ எண்ணங்கள் ஆங்காங்கே தலைத்தூக்கின. ஐரோப்பியர்களான கிறித்தவ மிஷனெரிகள் வெறுமனே சமயத்தை மட்டுமே பரப்பாமல் மக்களின் அறியாமையை அகற்றும் பல்வேறு சீரியப் பணிகளையும் செய்தனர். இதன் மூலம் கிறித்தவத்தை ஏற்றவர்களிடம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த சமூகமும் விழிப்படைய தொடங்கியது.
கி.பி 1578 ஆம் ஆண்டு கிறித்தவ மிஷனெரி, அறிஞர் அண்ட்ரிக் அடிகளார் மூலம் புன்னைக்காயலில் அச்சுக் கூடம் ஏற்படுத்தப்பட்டது. இது தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும் மிகப்பெரிய சமூக அறிவுப் புரட்சிக்கும் வித்திட்டது எனலாம்.
தமிழகத்தைப் பொறுத்தவரை தமிழ் மொழி கிறித்தவத்தால் புதிய பரிமாணமே அடைந்து செழித்தோங்கியது.
முறைப்படி மொழிக் கற்றோர் மட்டுமே உய்த்துணரும் அளவில் இருந்த செய்யுள் வடிவ படைப்புகளால் எட்டாத கனிகளாக இருந்த மொழித்திறன் கிறித்தவ சமயப்பரப்புனர்களால் உரைநடை வடிவம் பெற்றது.இதனால் பாமரரும் அறிந்து தம் அறிவின் எல்லையை விசாலமாக்கும் அளவிற்கு புத்தெழுச்சிப் பெற்று வெற்றிப் பெற்றது. அதற்கு முன்பு தமிழ் மொழியில் பேச்சு வழக்கிற்கும் எழுத்து வழக்கிற்குமிடையே இரு வெவ்வேறு மொழிகளுக்கேயிடையேயான வேறுபாடுகளை ஒத்த இடைவெளி இருந்து வந்தது.
ஒவ்வொரு சாதிப் பிரிவின் சமூகத்தவரும் தங்களுக்கே உரிய பேச்சு வழக்குகளை உருவாக்கி வைத்திருந்தனர்.அதனைத் தங்களது அடையாளங்களாகவும் கருதினர். இந்நிலை உரைநடை வளர்ச்சியால் சமநிலைப்பாட்டை அடையவேண்டியதாயிற்று. ஏனென்றால் உரைநடை வளர்ச்சி அனைத்து தரப்பினருக்குமான பொதுவான ஒரு எளிய பொதுநடையை உருவாக்கித் தந்தது.
முதலில் இப்புதிய எழுத்து வடிவம் வடமொழிச் சொற்கள் கலந்த மணிப்பிரவாள மொழிநடையாக இருந்தபோதும் தொடர்பயணத்தின் போது தமிழ் ஆர்வலர்களால் சீரமைக்கப்பட்டு உயிர்ப்படைந்து செழுமையடைந்தது.
இந்திய சமூகத்தின் மறுமலர்ச்சிக்கு அந்தந்த காலகட்டங்களில் ஏற்பட்ட பல்வேறு சமயங்களின் கொள்கைகளும் அதன் தாக்கங்களும் பங்களித்திருந்தாலும் கிறித்தவத்தின் வளர்ச்சிக்கான முயற்சிகளும் நடவடிக்கைகளும் அதன் செயற்பாட்டாளர்களால் ஒட்டுமொத்த இந்திய சமூகத்தின் கட்டமைப்புகளையே தகர்த்து புதிய கண்ணோட்டத்தையும் அறிவார்ந்த சமூகத்திற்கான தொடக்கத்தையும் உண்டாக்கியது என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இருக்க இயலாது.
_ Dr. ஜான்சிபால்ராஜ்
வன்னியன் குடியிருப்பு.
Very good information.Thank you mam
ReplyDeleteWow ! Good information
ReplyDeleteThanks friend...
ReplyDeleteஅருமை.கிறிஸ்தவத்தால் தமிழ் மொழியும்,தமிழ் கலாச்சாரமும் வளர்ந்தது என்பதே மறுக்க முடியாத உண்மை
ReplyDelete