*பெண்ணின வாக்குரிமை*


         பாலின அசமத்துவம் உலகளாவிய நிலையில் இன்றும் பெரும் பிரச்சனையாகவே இருந்து வருகிறது. தற்போதைய நிலையைவிட சில நூற்றாண்டுகளுக்கு முன்பு இருபாலருக்குமிடையேயான  உரிமைகளின் அளவின் இடைவெளிகள்  மிக அதிகமாக இருந்து வந்தது.பெண் ஆணுக்கு எந்த விதத்திலும் குறையாத வகையில் இயற்கைக் கூறுகளுடன் படைக்கப் பட்டிருந்தாலும் சமூக, பொருளாதார ,அரசியல் நிலைப்பாட்டில் பெண்ணிற்கு சமத்துவம் கிடைக்கவில்லை என்பது பெரும் சமூகத் தீங்காகவும் சமூக முன்னேற்றத்தின் தடைக்கல்லாகவும் இருக்கிறது. 
          மனித வாழ்வியல்முறைகளில் படிப்படியாக ஏற்பட்டு வந்த பல்வேறு மாற்றங்களால் தந்தைவழி முறை உறுதியான பிறகிருந்தே பெண்ணின் உரிமைகள் முடக்கப்பட்டு  ஒதுக்கப்பட்டதோடு பெண் மீதான சமூக மதிப்பீடுகள் குறைந்து போனதை அறிய முடிகிறது. 
     காலப்போக்கில் ஏற்பட்ட பெண்ணிய இயக்கங்களால் ஓரளவு விழிப்படைந்த பெண் சமூகம் தங்களுக்கான உரிமைகளை ஆண்களுக் கிணையாக அடைந்து செயல்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டன. 
  அவற்றுள் ஓர் உரிமையே வாக்குரிமை! 
    அரசியலில் தங்களுக்கான அதிகாரத்தை வெளிப்படுத்தும்
ஒரு கருவியே மக்களின் வாக்குரிமை. அத்தகைய வலிமையான ஆற்றல்மிகு சக்தியைப் பெண்களுக்கு அவசியமற்றதாக கூறி வழங்காமலேயே  தடுத்து நிறுத்தி வைத்திருந்தது , ஆண் மையச் சமூகம்.!
    மனிதக் குலத்தின் சரிபாதியான பெண்ணினத்தை மட்டும் வாக்குரிமைக்குத் தகுதியற்றவர்களாகக் கருதும் போக்கை மாற்ற ,பல்வேறு போராட்டங்கள் நடை பெற்றிருக்கின்றன. தனது அடக்கியாளும் ஆசைக்காக திட்டமிட்டுப் பறிக்கப்பட்ட
 எந்தவொரு உரிமையும் திரும்பபெற ,போராடியே தான் ஆக வேண்டும் என்பது நிதர்சனம்.
      18 ஆம் நூற்றாண்டில் பிரான்சில் தான் முதலில் பெண்களுக்கான வாக்குரிமை இயக்கம் தொடங்கி பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியது. இதன் தொடர்ச்சியாக பல்வேறு மேலை நாடுகளிலும் இந்தப் போராட்ட சிந்தை தொற்றிக் கொண்டது.
இப்போராட்டத்திற்குப் பெண்கள் மட்டுமல்லாமல் இக்கருத்தை ஆதரித்த முற்போக்கு சிந்தனையாளர்களான பல்துறை ஆண்களும் இருந்திருக்கின்றனர். 
      பிரான்சில் இவ்வியக்கம் தோன்றி விரிவடைந்த போதும்  நியூசிலாந்து நாடு தான்  முதன் முதலில் கி பி1893_ல் வளர்ந்த அனைத்துப் பெண்களுக்கும் வாக்குரிமையை அளித்து உலகளவில் வரலாற்றில்  தனக்குப் பெருமை சேர்த்துக் கொண்டது . ஆனால் அதே நாட்டிலும் கூட பெண்கள் நாடாளுமன்ற தேர்தலில் நின்று தேர்ந்தெடுக்கப் படுவதற்கான  உரிமையை கி.பி 1919 ல் தான் அது பெற முடிந்திருக்கிறது...!
      இந்நிலையில் இந்தியாவிலும் இந்தியப் பெண்கள் வாக்குரிமைப் பெற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதற்கு ஆங்கிலேயப் பெண்களான அன்னிப்பெசண்ட் , டாரத்தி ஜினராஜதாசர், மார்கரட் கசின்ஸ் ஆகியோரோடு சரோஜினி நாயுடுவின் தலைமையில்  பதினெட்டு இந்தியப் பெண்களும் இணைந்து இந்தியப் பெண்களின் வாக்குரிமைக்காகப் போராடினர்.இவர்கள் மாண்டேகுவிடம் அளித்த தங்களது கோரிக்கையை அது முதலில் நிராகரித்தது.தொடர் முயற்சியின் விளைவாகவும்  சுதந்திரப் போராட்டத்தில் இந்தியப் பெண்களின் ஆதரவின் தேவையை உணர்ந்தும் பின்னர் இந்திய தேசிய அரசியல் வாதிகள் இதற்கு ஆதரவளித்தனர்.ஆனாலும் சொத்துரிமையும் வருமானமும் பெண்கள் வாக்குரிமைப் பெறும்  தகுதிகளாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.      
       இந்தியாவில் முதன் முதலில் கி.பி1923 ஆம் ஆண்டு ராஜ்கோட் மாநிலமே( தற்போது மாவட்டம்) பெண்களுக்கு வாக்குரிமை  அளித்தது. அதனைத் தொடர்ந்து படிப்படியாக பிற மாநிலங்களும் பெண்களுக்கு வாக்குரிமை அளித்தன. 
    அதன் பின்னர் பெண்கள் சட்டசபையில் இடம்பெறவும் தங்களுக்கான முன்னேற்றப் பாதைகளைச் செப்பனிடவும் பாடுபட்டனர். பல அரசியல் தலைவர்களும் பெண்ணியவாதிகளான பெண்கள் குழுவும் இணைந்து மேற்கொண்ட  இம்முயற்சியினால் கி.பி 1927 ஆம் ஆண்டு அத்தடை  நீக்கப்பட்டு  சென்னை உட்பட சில மாகாணங்களில் பெண்கள் சட்டசபையில் இடம் பெற வழியேற்பட்டது. 
       இவ்வாறு பெண்கள் வாக்குரிமைப் பெற உலக அளவிலும் இந்திய அளவிலும் பல போராட்ட முயற்சிகள் மேற்கொண்டதன் மூலமாக தான் வெற்றிபெற முடிந்தது. அதன் விளைவாகவே இன்று பெண்கள் அரசியலில் ஈடுபட்டு 
நாடாளும் உரிமையும் பெற்றிருக்கின்றனர்.
     சென்னை மாகாணத்தின் முதல் சட்டமன்ற உறுப்பினராக மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையாரும் நமது நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியாக பிரதீபா பாட்டீல் அம்மையாரும் பதவி வகித்து அசத்தியமை நாடறிந்ததே!
         வாக்குரிமை என்பது மக்களாட்சியில் நமது பிரதிநிதியை நாம் சுட்டிக்காட்ட பயன்படுத்தும் சக்தி வாய்ந்த ஆயுதம். இதை எதற்கும் ஈடாக்க முடியாது. அரசியலில் நம்மிடமுள்ள இச்சக்தியை நாம் பயன்படுத்தும் விதத்தில் தான்  நமது எதிர்காலமே இருக்கிறது என்பதை ஒவ்வொரு பெண்களும் உணர்ந்து விழிப்போடு தங்களது வாக்குரிமையைப் பயன்படுத்த தயாராக வேண்டும். 
    பிறரின் விருப்பு வெறுப்புகளுக்கும் மலிவான ஆதாயங்களுக்கும் நமது அவ்வுரிமையை அடகு வைத்தல் அறிவீனத்தின் உச்சம்.போதிய
அரசியலறிவையும்  தொலைநோக்குப் பார்வையையும் பெண்கள் வளர்த்துக் கொள்வதே வாக்குரிமையை மிகச் சரியாக பயன்படுத்துவதற்கான முதன்மையான வழிமுறை.
      பெண்ணினத்தின் இயற்கையான தலைமையேற்று வழிகாட்டும் தன்மையும் எதையும் ஆய்ந்தறிந்து அணுகும் மனோபாவமும்   இன்றும் எதனோடும் ஒப்பிட இயலாத அறிவார்ந்த தனித்தும் என்பது மறுக்க இயலாது.  
        பெண்ணே உன் வாக்குரிமையை மிகச் சரியாக பயன்படுத்து...!நாளை நமதே!!

_ Dr.த.ஜான்சிபால்ராஜ்.
    
       

      
      

Comments

  1. பெண்களின் வாக்குரிமை பற்றிய ஆரம்ப கால வரலாற்று கட்டுரை மிக அருமை. தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி சகோ..🙏

    ReplyDelete
  2. நன்றி சகோ...எனது கட்டுரைகளை வாசித்து கருத்துரைத்து வருவதற்கு

    ReplyDelete
  3. சிறப்பு சகோ.
    மென்மேலும் தங்கள் வளர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. மகிழ்ச்சி.. சகோ.நன்றி

    ReplyDelete
  5. அருமை வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. வாக்குரிமையின் சக்தி தான் ஒரு நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கிறது... நிதர்சனமான வார்த்தைகள்...
    பெண்களின் வாக்குரிமை பற்றிய செய்திகளும், அவை கடந்து வந்த பாதையும்... அறியப்படாத, ஆச்சரிய‌ தரவுகளாக பதிவு செய்த விதம் அருமையாக உள்ளது சகோதரி

    ReplyDelete
  7. மிக்க நன்றி....தங்களது கருத்துக்களுக்கு....சகோ

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

*பெண் தலைமைத்துவ ஆளுமை* கிளாரிந்தா அம்மையார்.

*தேர்தல் அவசரம்*