பாவை !
*அடங்கிய ஆசை*
நீலகிரியின் நீலமலை அரசி ஊட்டியென்றால் அதனருகே எழில்மிகுந்த கோத்தகிரி அழகில் இளவரசியே தான்..!
பனிமூட்டங்கள் துண்டு துண்டாக கண்ணெதிரே ஊர்ந்து சென்று கொண்டிருக்க, என் சருமத்தை மூடியிருந்த
கெட்டியான பனியனையும் தாண்டி உடலை பதம் பார்த்துக் கொண்டிருந்தது டிசம்பர் மாத குளிர்.
அதிகாலையா முன்னிரவா என்று கணிக்க முடியாத அளவில் இருட்டிக்கொண்டிருந்தது அன்றைய மதிய வேளை!
கடைவீதியில் எதையும் பொருட்படுத்தாமல் என் வலது கையை பிடித்தபடியே உற்சாக நடை போட்டு ஓட்டமும் குதித்தலுமாகப் புன்னகைப் பொங்க மகிழ்ச்சியில் ஏதேதோ கூறி கொண்டே வந்தாள் எனது ஆறு வயது மகள் ரோசி.
அவளின் குதூகலத்திற்கு ஒரே காரணம் அன்றைய எனது மற்ற வேலைகளை முடிந்து விட்டதால் கடைசியாக அவளுக்குப் பிடித்தமான மொம்மைக் கடைக்கு போய் கொண்டு இருப்பது தான்...!!
கடை வந்து விட்டது...
அய்....!!_ என் கையை உதறி விட்டு கடைமுன்னிருந்த நான்கு படிகட்டுகளையும் சில நொடிகளில் கடந்து கடையின் வாசலுக்கு சென்று நின்றபடி என்னைத் திரும்பி பார்த்தாள்.
ஹா...ஹா...இன்னும் இரங்கலையா...??_ என் வேகத்தை கேலி செய்தாள்.
*நில்லு நான் வாரேன்*_ சொல்லி முடிப்பதற்குள் கடைக்குள் ஓடி ஒரு மூலையில் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி பெட்டிக்குள் சுட்டிக்காட்டி அதை எடுத்து தரும்படி விற்பனையாளரை வற்புறுத்திக் கொண்டிருந்தாள்.
யார் கூட வந்த..?_ அந்தப் பெண் கேட்டுக்கொண்டே வாசலை எட்டிப் பார்த்தாள்.
நான் மிதியடியில் காலை லேசாக தேய்த்து விட்டு ...*வர்ரேன்மா* _ என்றேன் புன்னகைத்தப் படியே.
பதிலுக்கு அவளும் லேசான புன்முறுவலோடு பார்வையை மகள் பக்கம் திருப்பி... *எது வேணும்....ம்...??*_ என்றாள் கொஞ்சலாக.
*அதோ அந்த ரோஸ்கலர் பார்பி பொம்மை *_ என்று சிறிய அவள் கால் விரல்களை தரையிலூன்றி தலையைச் சாய்த்து, கையை முடிந்தவரை நீட்டி சுட்டினாள்.
அந்தப் பெண், ம்... ம்...என்ற படியே கண்ணாடியைத் தள்ளி பொம்மையை எடுத்து பவ்யமாக அவளருகே நீட்ட...
*அய்ய...இது என்னடி பொம்மை... குச்சிக் குச்சா காலும் கையும்...!? மொம்மை மாதிரியா இருக்கு? வீட்டிற்கு போவதற்குள் பிஞ்சிடும்...! அது வேண்டாம்....! அதோ... இருக்கே அதை எடும்மா*_ என்றேன் குண்டான உடலோடு சந்தன நிறத்தில் ஊதா வண்ணப் பூப்பதித்தச் சட்டையும் பாவாடையும் போட்ட இரட்டை சடை பொம்மையை காட்டி..!
*அது வேண்டாம்மா எனக்கு*_ சிணுங்கியபடியே என்னை பிடித்து உலுப்பினாள்.
கைப்பையை மேசையில் வைத்து விட்டு அவளைத் தூக்கி கன்னத்தில் முத்தமிட்டபடியே... இங்க பாரு ரோசி... ! நான் உன்ன மாதிரி இருந்தப்ப எங்க அம்மாக்கிட்ட எத்தனைவாட்டி இந்தப் பொம்மையை தான் வாங்கி தரச் சொல்லி கெஞ்சி அழுதிருக்கேன் தெரியுமா? இப்ப நினைத்தாலும் மனசு கனக்குதுடி..! இதையே வாங்கிக்கோ....._ என் கெஞ்சலால் அமைதியாய் தலையாட்டியபடி அறைக்குறை மனசோடு வாங்கினாள்..!
அடிமனதில் எங்கோ ஒரு மூலையில் ஒட்டிக் கிடந்த நிராகரிப்பிற்குள்ளான என் ஆசை பெருமூச்சு விட்டபடியே திருப்தியாய் அடங்கி போனது...!
வாங்கி கடையை விட்டு வெளியே வந்ததும்,
என் ஆசைகளை எதையுமே என் அம்மா நிறைவேற்றவே இல்லடி...._ என்று தன் பழைய கதையை ஆரம்பித்தேன்...!
பதிலேதும் வராததால் திரும்பி பார்த்தேன் ...!எனக்கு
நான்கடி பின்னால் அந்த கடையையே பார்த்தபடி ....ஏக்கப் பெருமூச்சு விட்டபடி நடைத் தளர நடந்து கொண்டிருந்தாள் என் ரோசி!
பொம்மை அவள் மார்போடு தலைகீழாக ...அவளால் அணைக்கப்பட்டிருந்தது....!
_ Dr. ஜான்சிபால்ராஜ்
பெற்றோர் தங்களது நிறைவேறாத ஆசைகளை பிள்ளைகள் மூலம் நிறைவேற்றி அவர்களது ஆசைகளை அடக்கும் தொடர் பண்பாடே இன்று பெரும்பாலான குடும்பங்களில் இருந்து வருகிறது.
ReplyDelete