*பெண் தலைமைத்துவ ஆளுமை* கிளாரிந்தா அம்மையார்.



       பதினெட்டாம் நூற்றாண்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் தூத்துக்குடியில்  டச்சுக்காரர்கள் எழுப்பிய டச்சு ஆலயத்தைத் தவிர்த்து திருநெல்வேலியில் தோன்றிய முதல் சீர்திருத்த ( Protestant) கிறித்தவ ஆலயத்தைக் கட்டிய கிளாரிந்தா என்ற பெண்ணின் தலைமைத்துவப் பண்பு  இன்றும்  நம்மால் கிரகிக்க இயலாத ஆளுமைத் தன்மை கொண்டதாகவே உயர்ந்து நிற்கிறது!
          இந்தியாவில் பெண் தலைமைத்துவம் என்பது ஆண் தலைமைத்துவத்திற்கு இணையாக  குடும்பம், சமூகம்,பொருளாதாரம், அரசியல் என்று எந்த தளத்திலும் இன்றுவரை முழுமையாக ஏற்கப்படாத நிலையில் ,18 ஆம் நூற்றாண்டில் பெண்களின் நிலை எவ்வாறு இருந்திருக்கும் என்பதை கற்பனையிலும் நினைத்துப் பார்த்து எழுத்தில் அவற்றை  விவரித்துவிடுவது எளிதல்ல...!
          பெண்ணினம் ஆணினத்தின் தேவைகளைப் பூர்த்திச் செய்யும் ஓர் உடைமையாக மட்டுமே பார்க்கப்பட்டதோடு எவ்விதத்திலும் ஆணுக்கிணையானவளாக யாராலும் உணரப்பட்டுவிடக் கூடாதென்ற  முன்னெச்சரிக்கையோடும் பெண் தன்னை உணர்ந்து தனது திறமைகளை, தனித்தன்மைகளை வெளிப்படுத்திவிடக் கூடாதென்பதிலும் அதிக சிரத்தையெடுத்து அடிமையென்ற நிலைக்குள் அவளைத்  தள்ளி, பண்பாடு ,கலாச்சாரம்,கற்பு என்ற பெயர்களில் பூட்டுப் போட்டு அடைத்து வைத்திருந்தது....!
          அதிலும் இந்தியப் பெண்களுக்கெதிரான கொடுமைகளின் அடர்வு அவர்கள் சார்ந்திருந்த சாதி சமயங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.  உயர்சாதியினராக கருதப்பட்டவர்கள் மற்றச் சாதியினரைக் காட்டிலும் அதிக அளவிலான கட்டுப்பாடுகளைத் தங்களுக்கென்று ஏற்படுத்திக் கொண்டிருந்தனர். இந்தக் கட்டுப்பாடுகளென்ற சமூகக் கொடுமைகளுக்குப் பலி கிடாக்களாக பெரும்பாலும் பெண்களையே பயன்படுத்தி வந்தனர்.  இந்நிலையில்  கிளாரிந்தா அம்மையாரும் அன்றைய உயர்குடியினராக கருதப்பட்ட  பிராமண பிரிவில் பிறந்தவரே.!
       கோகிலா என்ற இயற்பெயரை உடையவரான கிளாரிந்தா, மகாராஷ்டிர வம்சத்தைச் சேர்ந்தவர்.இளம் வயதிலேயே (கி.பி 1770)துளசாசி  மன்னரின் அரண்மனையில் அதிகாரியாக இருந்த ஒருவருக்கு திருமணம் செய்து கொடுக்கப்பட்டார்.ஆனால் சில ஆண்டுகளில் அவரது கணவர்  மரணமடைந்ததால்  இளம் வயதிலேயே கைம்பெண் ஆனார்.அப்போது கணவர் இறந்தவுடன் மனைவியை உடன்கட்டை ஏற்றிக் கொல்லும் பழக்கம் தஞ்சாவூர் அரச பரம்பரையில் இருந்து வந்தது. அதன்படி கோகிலாவை எரிந்து கொண்டிருக்கும் சிதையில் ஏற்ற முற்பட்ட போது ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனிப் படையின் அதிகாரி ஹென்றி லிட்டில்டன் (Henry Lyttilton)என்பவர் இதைக்  காணநேரிட மனிதாபிமானத்தோடு அப்பெண்ணை அச்சிதையிலிருந்து தூக்கிச் சென்று காப்பாற்றினார். இதனை வெறுத்த பிராமணர்கள்,  வைதீகப் பிராமண சமுதாயத்திலிருந்து அவளுக்கு விலக்கு அளித்தனர்.ஆதரவற்ற இளம்பெண்ணான கிளாரிந்தா  லிட்டில்டனின் அன்பில் இணைந்து கொண்டார்.சில காலத்தில் இருவரும் உண்மையான அன்புடன் கணவனும் மனைவியுமாக வாழ்ந்தனர். பின்னர் லிட்டில்டன் பாளையங்கோட்டைக்கு இடமாற்றம் செய்யப்பட்டபோது கிளாரிந்தாவும் அவருடன் வந்தார்.லிட்டில்டன் கிளாரிந்தாவிற்குத் தனது அன்பை மட்டுமல்லாமல் இயேசு கிறிஸ்துவின் முழு அன்பையும் விவிலியக் கொள்கைகளையும் குறித்து போதித்திருக்கிறார் ...!இதற்கு பின்னாட்களில் கிளாரிந்தாவின் வாழ்க்கையே சாட்சி பகர்ந்தது.
     ஆனால் கொடுமையான சூலை என்ற நோயால் பாதிக்கப்பட்டு சில ஆண்டுகளில் லிட்டில்டன் இறந்து போனார்.
கிளாரிந்தாவின் உண்மையான அன்பிற்குப் பரிசாக  தமது சொத்துக்கள் முழுமையையும்  கிளாரிந்தாவிற்கே எழுதி வைத்திருந்தார் லிட்டில்டன்.                       

        தன்னந்தனியாக விடப்பட்ட கிளாரிந்தா லிட்டில்டன் மூலம் பெற்ற கிறிஸ்து ஏசுவின் அன்பால் ஆறா துயரினின்று மீண்டெழுந்தார்.  லிட்டில்டன் அவருக்கு வழங்கிய சொத்துக்களால் மிகுந்த செல்வச் சீமாட்டியாக இருந்த கிளாரிந்தா, தனதுவாழ்வையும் செல்வத்தையும்
இறைப்பணி மற்றும் சமூகப் பணிக்காகவுமே செலவிட்டார்.
       ஸ்வாட்சு ஐயர் மூலம் ஞானஸ்தானம் பெற்ற கிளாரிந்தா , சீர்திருத்த சபையை நிறுவி  ஆலயம் கட்ட தீர்மானித்தார்.கி.பி1785 ஆம் ஆண்டு ஆலயத்தைக் கட்டிமுடித்தார்.கிளாரிந்தாவால் கட்டப்பட்ட இவ்வாலயமே  திருநெல்வேலியில் தோன்றிய முதல் சீர்திருத்த ஆலயம் என்ற சிறப்பிற்குரியதானது. 
      அக்கால கட்டத்தில் கணவனை இழந்த கைம்பெண்களின் நிலைமை மிகக் கொடூரமானதாக இருந்தது. அதிலும் சிதையிலிருந்து காப்பாற்றப்பட்ட பெண்ணின் மீதான சமூகப்பார்வை எப்படியிருந்திருக்கும் என்று கற்பனை  செய்தால் கூட வேதனையில்  கசக்கிறது மனம்..! ஆனால் அப்பார்வைகளையெல்லாம்  பொருட்படுத்தாமல்  தூக்கியெறிந்த கிளாரிந்தா தனக்குள் எரிந்த கிறிஸ்துவின் அன்பை பிறருக்குள் பற்றவைக்க எழுந்தார்.அவருக்குள் சுடர்விட்ட  இலட்சியத்தீ சமூகத்தில் அவர்மீதான மிக மோசமான தாக்குதல்களையெல்லாம் எளிதில் அல்லல் தட்டி, அவரது உள்ளுணர்வில் தலைமைத்துவத்தை விழித்துக் கொள்ள வைத்தது...! 
  தலைமைத்துவம் என்றாலே இன்று, தனக்கு கீழான சமூக அந்தஸ்துடையோரை அல்லது நிறுவன நிலைகளில் பங்காற்றுவோரை அடக்கி ஆள்வது தான் என்ற நிலைப்பாட்டில் நிறையபேர் தங்களது ஆதிக்கத்தை திணித்து ,தங்களது தலைமைத்துவத்தை பிறரறிய கூவிக்கொண்டலைகிறார்கள்.        
     ஆனால் உண்மையான தலைமைத்துவம் என்பது 
 "அசாதாரணமான ஒரு விஷயத்தை நிகழ்த்திக்காட்டும் பொருட்டு மக்கள் பங்களிப்பதற்கான வழியை உருவாக்குவது பற்றியதே"என்று கிரீன்டெக்கின் ஆலன் கீத் என்பவர்  குறிப்பிடுகிறார். 
       ஆம் ,அத்தகைய மகத்தான தலைமைப் பண்புகளையே கிளாரிந்தா அம்மையார் கொண்டிருந்தார்.
சமயப்பணிக்காகவும் சமூகச் சீர்திருத்தப் பணிகளுக்காகவும்   தன்னோடிருந்தவர்களை ஒருங்கிணைத்து  தான் மேற்கொண்ட பணிகளைக் கச்சிதமாக செய்து முடிக்கும் திறனைப் பெற்றிருந்தார், கிளாரிந்தா. 
       தாம் கட்டிய ஆலயத்தைப் பிரதிஷ்டை செய்ய திருச்சிராப்பள்ளியிலிருந்த போதகர் சுவாட்சு ஐயரை நேரில் சென்று , கண்டு பேசி ஆலயத்தை பிரதிஷ்டை செய்து தரும்படியாகக் கேட்டிருக்கிறார்.  எதிலும் தன்னை முதன்மைப்படுத்த முயலாத அவரது இந்த ஆளுமை, அவரின் தலைமைத்துவத்தை மேலும் மெருகேற்றியதை வெளிப்படுத்துகிறது.     

      அதைப்போன்றே கி.பி1773 ஆண்டில் ஜேசு சபை கலைக்கப்பட்டதால் கத்தோலிக்க கிறித்தவர்கள் அதுவரை தங்களை வழிநடத்திய  பாதிரியார்களின்றி கலங்கி நின்ற தருணத்திலும்
 கிளாரிந்தா மிக நுட்பமான அறிவுடன் "அவர்களுள் சிலருடன் உரையாடி 
சீர்திருத்தக் கிறித்தவ சபையில் சேரும்படி செய்தார் .அதுமட்டுமின்றி தமது வீட்டிலேயே முறைப்படியான, ஆராய்ச்சிசார்ந்த நுணுக்கமான கலந்தாய்வுகள்,கருத்தரங்குள் நடத்தியதற்கான சான்றுகள் இருப்பதாக பேராசிரியர் கரோலின் ஜெபத்துரை  தனது நூலில்  குறிப்பிடுகிறார். 
     சபை பிரிவினைகளையும் அவற்றிற்கிடையேயான கொள்கை மாற்றங்களையும்  கருத்தில் கொண்டு இன்றும் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் நிலையில் அன்றைய சூழ்நிலையில் அவரது அம்முயற்சிகள் முற்போக்கான அவரது  சிந்தனைகளையே வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.
    தான் ஏற்படுத்திய சபைக்கு ஒரு உபதேசியாரை அனுப்ப வேண்டி நடைப்பயணமாகவே தனது வளர்ப்பு மகன் ஹென்றி லிட்டில்டன் மற்றும் சிலருடன் இணைந்து பாளையங்கோட்டையிலிருந்து தஞ்சாவூருக்கு ஸ்வாட்சு ஐயரை நேரில் காண சென்றவர் இவ் வீரமங்கை.  கிளாரிந்தாவின் ஆழமான ஆர்வத்தைக் கண்டு வியந்து போயிருக்க வேண்டும் ஸ்வாட்சு ஐயா்...! அவரெடுத்த அச்சீரிய முயற்சியினால் தான்  மிகச் சிறந்த
இறைத் தொண்டரான கற்பகம் சத்தியநாதன் என்ற உபதேசியாரை கி.பி1785 ஆம் ஆண்டு பாளையங்கோட்டைக்கு அனுப்பி வைத்தார்.
     எதை ,எப்படி ,எச்சூழலில் செய்யவேண்டும் என்ற நுட்பமான அணுகுமுறை அவரது உயர்ந்த தலைமைத்துவத்தின் உட்கூறாக அமயப் பெற்றிருந்ததை இன்றும் பறைசாற்றி நிற்கின்றது அவரது வியத்தகுப் பண்புகள்.
     உயர்குலத்தவராக தங்களைக் கூறிக்கொண்ட ஒருசாரார் மட்டுமே கல்விக் கற்க முடிந்த அந்நாட்களில் எவ்விதப் பாகுபாடுமின்றி அனைவரும் கல்விக் கற்கும் வகையில் தனது வீட்டிலேயே திண்ணைப் பள்ளிக்கூடம் ஒன்றை அமைத்து அதற்கு ஆசிரியரையும் நியமித்து அவருக்கு ஊதியமும் கொடுத்திருக்கிறார். அவரது தலைமைத்துவம் பின்னாட்களில் திருச்சபையின் தூண்களாக விளங்கிய நிறைய தலைமைத்துவங்களை எழுப்பிவிட்டது.
      கிளாரி்ந்தாவின் சமயப் பணியினால் உருவான அந்த முதல் சபையி்ல் 40 பேர் அங்கத்தினர்களாக இருந்தனர். அவர்கள் 13 வேறுபட்ட சாதியினராவர். சாதியத்தை இந்தியாவில் விதைத்தக் குலத்தில் பிறந்த கிளாரிந்தா சாதிப்பிரிவினையை எதிர்த்து அதை தனது செயலில் காண்பித்து பெரும் புரட்சி செய்திருக்கிறார். . .!   இதுபோல் அவரது தலைமைத்துவ ஆளுமைக்கு உதாரணமாக இன்னும் நிறைய மிச்சமுண்டு!
         அவரது பணிகளை கனபடுத்திய சகல அதிகாரத்திற்கும் துரைத்தனங்களுக்கும் தலைவரான நம் தேவாதி தேவன்  *கிளாரி்தாவே திருநெல்வேலி திருச்சபையின் தாய்* என்ற உயரிய இடத்தை அளித்திருக்கிறார்.        

      திருநெல்வேலி திருச்சபை வரலாற்றை மட்டுமல்ல இந்திய கிறித்தவ வரலாற்றை மிகச் சரியாக எழுதவோ அறி்ந்திடவோ விளைவோர் எவரும் கிளாரிந்தா என்ற புரட்சி நாயகியை கண்டு கொள்ளாமல் போக முடியாது என்பது உண்மை.
       
 _ Dr. ஜான்சிபால்ராஜ்
வன்னியன்குடியிருப்பு

Comments

  1. இரு நூற்றாண்டுக்கு முன்னர் புரட்சி பெண் கோகிலா திருட்சபைக்கு ஆற்றிய பணிகள் இன்றளவும் படிக்க ஆர்வமாகவும் ஆச்சரியம் தருவதாகவும் உள்ளது.கருத்து கட்டுரை தொகுத்த சகோதரிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..👍🏻

    ReplyDelete
  2. இரு நூற்றாண்டுக்கு முன்னர் புரட்சி பெண் கோகிலா திருட்சபைக்கு ஆற்றிய பணிகள் இன்றளவும் படிக்க ஆர்வமாகவும் ஆச்சரியம் தருவதாகவும் உள்ளது.கருத்து கட்டுரை தொகுத்த சகோதரிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..👍🏻

    ReplyDelete
  3. இரு நூற்றாண்டுக்கு முன்னர் புரட்சி பெண் கோகிலா திருட்சபைக்கு ஆற்றிய பணிகள் இன்றளவும் படிக்க ஆர்வமாகவும் ஆச்சரியம் தருவதாகவும் உள்ளது.கருத்து கட்டுரை தொகுத்த சகோதரிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..👍🏻

    ReplyDelete
  4. மிக்க நன்றி தங்களது கருத்துரைக்கு சகோ. மனம் மகிழ்கிறேன்.

    ReplyDelete
  5. மிகவும் அருமையான பதிவு. அம்மையார் ஆரம்பித்த சபையயில் 40 பேரில் 13 சாதியினர். இன்றைக்கு சாதிக்கு ஒரு சபை இந்த நிலைமை மாற நாம் ஜெபிக்க வேண்டும். உங்கள் பணி தொடர வாழ்த்துகின்றேன் சகோதரி.

    ReplyDelete
  6. ஆம் ஐயா. மகிழ்ச்சி... தங்களது அறிவுரைக்கு நன்றி.

    ReplyDelete
  7. தெரியாத விடயங்களை அருமை யாக பதிவுச் செய்து உள்ளது... இந்த கட்டுரை... மிகச்சிறப்பு சகோதரி

    ReplyDelete
  8. நன்றி சகோ.மகிழ்ச்சி

    ReplyDelete
  9. Really Glarinda is a super personality...I love Glarinda...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

*தேர்தல் அவசரம்*